×

ஜனநாயகத்தையும், மக்களையும் காப்பாற்ற வரும் நாடாளுமன்ற தேர்தல் இறுதி போர்: திருமாவளவன் பேட்டி

வேலூர்: ‘வரும் நாடாளுமன்ற தேர்தல் அரசியலைப்பையும், ஜனநாயகத்தையும், நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்கான இறுதிப்போராகும்’ என்று திருமாவளவன் கூறினார். வேலூரில் நேற்று விசிக தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சியில் வரும் 26ம் தேதி வெல்லும் ஜனநாயகம் மாநாடு நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இடதுசாரி கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, ராஜா என கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தின் முதல் புள்ளியாக இது அமையும். வரும், நாடாளுமன்ற தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல. ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் நாட்டு மக்களை காப்பாற்றும் இறுதி போராகும். இதில், இந்தியா கூட்டணி வெற்றி பெறும். அதற்கான அச்சாரமாக விசிக.வின் வெல்லும் ஜனநாயக மாநாடு இருக்கும். பில்கிஸ்பானு வழக்கின் மேல்முறையீட்டில் வெளியான தீர்ப்பு ஆறுதலை தருகிறது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு நீதி வழங்கப்பட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பு சட்டம், நீதித்துறையின் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும். இதற்காக அண்மையில் விசிக சார்பில் வேண்டாம் இவிஎம், வேண்டும் மீண்டும் வாக்குச்சீட்டு முறை என்ற ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். இந்திய கூட்டணியின் கூட்டம் தமிழகத்திலும் கட்டாயம் நடத்தப்படும். விசிக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பதை பேச்சுவார்த்தைக்கு பிறகு தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஜனநாயகத்தையும், மக்களையும் காப்பாற்ற வரும் நாடாளுமன்ற தேர்தல் இறுதி போர்: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Parliamentary Election ,Thirumavalavan ,Vellore ,Victory Democracy Conference ,Trichy ,Chief Minister ,
× RELATED அமித் ஷா தொடர்பான போலி வீடியோ:...